Wednesday, April 22, 2020

கொரோனா.......

"கொரோனா "இந்த வார்த்தை யாரு கேட்டாலும் நம்மால் மறக்க முடியாது. எத்தனை வருடங்களானாலும் இந்த வார்த்தை கேட்டவுடன் நமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் நினைவுவரும். பாதிப்பு என்றால் அதில் நல்லதும் இருக்கு , சொல்ல போன நல்ல பாதிப்புப்புகள் தான். இந்த வைரஸ் ஒரு சில நாளில் அனைவரின் வாழ்க்கையை, தவறு.. அவசர வாழ்ககையை சற்று பாஸ் பட்டன் செய்துள்ளது. நம் எல்லாரையும் ஒரு நிமிடம் நம் கோபங்கள் , சண்டைகள், வேலைகள் இப்படி பல விஷயங்களை சற்று ஓரமாக ஒதுக்கிவைத்துள்ளது. எல்லார் மனதிலும் இந்த கொரோன என்ற பயங்கரம் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நாம் இப்பொழுது மூன்றாவது வாரம் "ஸ்டே அட் ஹோம்" போய்க்கொண்டிருக்கிரோம். சரி நாம் இப்படி வீட்டில் இருந்து என்ன சாதிச்சோம் அப்படினு பார்த்தீங்கன்னா , பேமிலி டைம் நிறைய கிடைத்திருக்கு , உறவினர்களுடன், பெற்றோர்களுடன் , நண்பருக்களுடன் பேசுவதற்கு நல்ல ஒரு தருணம் என்றே சொல்லலாம். யாருகிட்டேயும் கொஞ்சம் பிசினு சொன்னது போய் இப்போ இந்த நிமிடத்தை உபயோகித்துக்கொள்கிறோம். வாய்க்கு ருசியா சமைத்து சாப்பிடுறோம் , நிறைய படங்கள் பேமிலியோட  பார்க்கிரோம். இதெல்லாம் நல்ல பாதிப்புகள் , சந்தோசமான தருணங்கள். ஆனா என் கண்ணோட்டத்தில் தெரியும் சில விஷயங்கள் இந்த கொரோன பாதிப்பு முடிந்தவுடன் இயல்பு வாழ்க்கைக்கு போன உடன் நடக்கும் பாதிப்புப்புகள், நாம் எல்லாரும் இயல்பாக இருப்போமா , அப்படி ஒரு கேள்வி எனக்குள் இருக்கு. என்னதான் இந்த கொரோன போனாலும் மனிதனின் மனதில் இருந்து போறதுக்கு எததனை நாள் எடுக்கும் என்று யாருக்கும் தெரியாது."சோசியல் டிஸ்டன்சிங்"எந்த அளவுக்கு மனதில் ஆழமாக துளை போட்டு உட்கார்ந்துஇருக்கிறது என்பது, நாம் அறிவோம். இயல்பாக பழகுவோமா? பயம் இல்லாமல் வெளியில் செல்வோமா?இப்படி நிறைய கேள்வி எனக்குள். அவசர வாழ்க்கையில் இருக்கும் பொழுது , நாம் எத்தனை பேரை பார்த்து சிரித்திருப்போம், இல்லை பேசிருப்போம் , இப்போ இந்த "சோசியல் டிஸ்டன்ஸ்" எந்த அளவுக்கு விரிசல் தந்துள்ளது என்பது தெரியவில்லை.இனிமேல்  ஒரு தும்மல் , இருமல் , காய்சசல் , எப்படி மனிதனின் பார்வையில் தெரியப்போகிறது என்பது நினைத்தால் கொஞ்சம் யோசனையாகத்தான் உள்ளது. நேரில் பார்த்தால் புன்முறுவல் செய்வார்களா இல்லை இதே ஆறடி தூரம் தள்ளி செல்வார்களா? இனிமேல் ஒரு கெட்டு -கெதர் இல்லை ஒரு பார்ட்டி இயல்பாக நடக்குமா இப்படி பல கேள்விகள். குழந்தைகளின் மனதில் எந்த அளவு பாதிப்பு இருக்கும். பள்ளிகளுக்கு செல்லும் போது ஏற்படும் மாற்றங்கள், அச்சங்கள்  ஒரு கேள்விக்குறிதான். இயல்பான வாழ்க்கைக்கு அவர்களும் திரும்புவார்களா?
முகமூடியுடன் அலைகிறார்கள் என்று போய் இன்று அனைவரும் முகமூடியுடன் அலையும் நிலைமை வந்துள்ளது. மனிதனுக்கு மனிதன் ஆறடி தூரம் போகும் நிலைமை , வாகனத்திற்கும்  வந்துவிட்டது. இந்த 2020 வருடம் நிஜமாகவே இந்த உலகத்துக்கு நிறைய சொல்லிவிட்டது, சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது , எது தேவை எது தேவையில்லை, ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன துளைத்து கொண்டிருக்கோம் , என்ன இழந்துகொண்டிருக்கோம்.... இப்படி சொல்லிக்கொண்டேபோகலாம்....  
இந்த நிலை மாறும்  ஆனால் சற்று தாமதமாகும் , அவ்வளவுதான் :) 
நல்லதை எதிர்பார்த்து இந்த "லோக்கடவுன்/ஸ்டே அட் ஹோம்"அனைவரும்  ஒன்றாக சேர்ந்து செயல்படுவோம் , வெல்வோம்.... 

Monday, February 18, 2019

அவசர வாழ்க்கை

அவசர வாழ்க்கை


அவசர வாழ்க்கை ,இதை பற்றி சொல்லணும் என்றால் எல்லாருமே எல்லாத்துலயும் அவசரம்

இந்த அவசரம் என்ற பேய்  பல பாதிப்புகளை அளிக்கிறது. நான் ஏன் "பேய்" சொன்னேன் என்றால் இது நம்மள விட்டு போகாம நம் பின்னாடியே அல்லது கூடவே இருக்கும் வேலை எளிதில் முடிப்பதற்கு எத்தனை இயந்திரகள் வந்தாலும் அவசரம் என்பது இருந்துகொண்டே தான் இருக்கும் காலை விடிந்ததில்  இருந்து இரவு தூங்கும் வரை அவசரம் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது.


இந்த அவசரத்தினால் பல  பாதிப்புகள் ,மறதி, இழப்பு, ஏமாற்றம், இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்

நாம்  இதனால் என்ன சாதிக்குறோம் இந்த அவசரத்தினால் நமக்கிருக்கும் ஒரு வாழ்க்கையை நம்மால் மகிழ்ந்திட முடியவில்லை। இதனால் வாழ்க்கை அவசரமாக தள்ளப்படுகிறது எதற்கும் மதிப்பு இல்லாமல் போகிறது. அழகான செம்மையான வானம் , தண்ணீர் ஓடையின் சத்தம்  அல்லது அழகான பூக்கள் அல்லது இசை.  இப்படி எதையும் அனுபவித்து ரசிக்க  முடியாமல் போகிறது.

அவசர ஓட்டம் நம் வாழ்க்கையை அவசரமாக தள்ளுகிறது. இதை நாம் எப்பொழுது உணரப்போகிரோம்.

Sunday, September 21, 2008

மூடநம்பிக்கைகள்

கண்மூடித்தனமான ஒன்றுதான் இந்த மூடநம்பிக்கை.கண்ணைமூடிக்கொண்டு நம்பிவிடும் நபர்கள் நம் உலகில் அதிகமாக உள்ளார்கள்.ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் வளர்ந்துகொண்டும்,வந்துகொண்டும் இருப்பார்கள்,
மக்களுக்கு எந்த வகையில் கூறினாலும் ,புரிந்துகொள்ளாமல் போவதுதான் கொஞ்சம் வருத்தபடக்கூடிய விஷயமாகும்.
ஒவ்வொருவருக்கும் மூடநம்பிக்கை பற்றி பல எண்ணங்கள் இருக்கும் இதில் என்னுடைய கருத்தை கூறுகிறேன்.
இந்த மூடநம்பிக்கை படித்தவர்கள்,படிக்காதவர்கள் என்று பார்க்காமல் உள்ளது.இதனால் அவர்கள் மட்டும் இல்லாமல் மற்றவர்களையும் கஷ்டத்திற்குள்ளாக்கிறார்கள்.பில்லி,சூனியம் இவற்றை நம்புவது,குறி சொல்வதை நம்புவது,.இவ்வாறு நம்புவதால் நம் நாட்டில் போலி சாமியார்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.தன்னை நம்புகிறார்களோ இல்லையோ இந்தமாதிரி சாமியார்களை நம்புவார்கள்.
எதுத்துகாட்டிற்கு : மனிதன் முதன் முதலில் புது மனை வாங்கினாலும்,புது வீடு புகுவதினாலும்,வேலைக்கு செல்வதிலும் நாள் கிழமைகளை பார்க்கின்றனர்.சொல்லும் கிழமைகளில் செய்தால் நன்றாக விளங்கும் என்ற நம்பிக்கை.ஏதாவது ஒரு வேலை சரியாக அமையவில்லை என்றால் உடனே கிழமைகளீன் மீது பழியை போடுவது.தான் என்ன தவறு செய்துள்ளோம் என்பதை பார்ப்பது கிடையாது.எவ்வளவு அறிவு உள்ளவர்களும் இந்த விஷயத்தில் அறிவு சற்று குறைவாகவே காணப்படுவர்.
இவர்களின் பகுத்தறிவின்மையால் மூளைக்கு மூளை போலி சாமியார்கள் தோன்றுகின்றனர்.
இன்னும் சில கிராமங்களில் நரபலி என்னும் கொடுமையான விஷயம் அதிகம் நடைபெறுகின்றது.பத்து மாதம் சுமந்து பெறும் குழந்தைகளை இவர்களின் மூடநம்பிக்கையால் அநியாயமாக இழக்கின்றனர்.
அடுத்தது கைகுறி சொல்பவர்கள் .இவர்கள் தெருவுக்கு தெரூ உள்ளனர்.இவர்கள் குறி என்ற பெயரில் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை அடித்து செல்கின்றனர்..இதை செய்தால் இவ்வளவு நன்மை ,அதை செய்தால் அவ்வளவு நன்மை என்று சொன்னால் போதும் தன் சொத்தை விற்க கூட தயங்கமாட்டார்கள்."பட்டால்தான் தெரியும் "என்று சொல்வார்கள்.ஆனால் நம் மக்கள் பட்டாலும் துடைத்துக்கொண்டு திரும்ப செல்வர்.இவர்களை மாற்ற எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தமாட்டார்கள்.
ராசிகற்கள்.:இது இப்பொழுது மிகவும் பிரபலமாகிவிட்டது.எந்த ஒரு தொலைக்காட்சி பார்த்தாலும் இதுதான்.கொஞ்சநாள்களுக்கு முன்பு என் தோழியை சந்தித்தேன்.அவள் கையில் ஒரு கல் அணிந்திருந்தாள்.நான் கேட்டதற்கு,தனக்கு நல்ல ஒரு வரண் வரவேண்டும் என்பதற்காக அணிந்திருப்பதாக சொன்னாள்.எனக்கு சிரிப்பு வந்தது.அவளுக்கு வரண் உடனே வரும் என்று விதி இருந்தால் வரும்,ஆனால் அவள் நம்பிக்கை அந்த கல் மீது உள்ளது.சரி கல்லை அணிந்து வரண் வந்ததா என்றால் அதுவும் இல்லை .இதை என் தோழியிடம் கேட்டதற்கு,திருமணம் கூடிவரவேண்டும் என்றால் வேறு நிற கல் அணியவேண்டும் என்று கூறிசென்றாள்.என்செய்வது காலம் ,மூடநம்பிக்கைகள் மனிதனின் மூளையை மழுங்கவைத்துள்ளது.என் தோழியை போல் இன்னும் எத்தனையோ பேர்.
இப்படிதான்,வண்டி இருக்கும் அது நன்றாக ஓடுவதற்கு ஒரு எலுமிச்சை பழத்தை தொங்கவிட்டுருக்கும்.அல்லது அதன் மீது ஏறி வண்டி செல்லும்.கேட்டால் அப்பதான் வண்டி நன்றாக ஓடும் என்று கூறுவர்.உள்ளே எத்தனையோ விஷயங்கள் இருக்கும் ,அதை வைத்து வண்டி ஓடாமல் இந்தபழத்தினால் ஓடும் என்று நம்புவர்.இதை நான் கேலியாக சொல்லவில்லை ,கவலையாக சொல்கிறேன்.
இப்பொழுது விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறிவிட்டது,ஆனால் இந்த மக்கள், இதில் பின் தங்கியுள்ளனர்.
இன்னொன்று மழை .இது இயற்கை சம்பந்தப்பட்டது.இதற்கு ஏதாவது ஒரு மனிதன் இந்த பலன்.அந்த பலன் என்று சொன்னால் அதை செய்வர்.ஆனால் மழை பெய்யுமா என்றால்? அது தெரியாது.இப்படி இன்னும்......
கள்ளிப்பால் கொடுத்து கொள்வது,தலையில் தேங்காய் உடைப்பது,ஆடு பழிகொடுப்பது,குழந்தையை பழிகொடுப்பது,முள்ளில் ஏறி நடப்பது,இப்படி பல விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.இதையெல்லாம் எடுத்து சொன்னால் நமக்கு பெயர் என்ன தெரியுமா ? நாத்திகன் என்று பெயர்.கடவுள் பற்று இருக்கவேண்டும் ,ஆனால் வெறிதனம் இருக்ககூடாது.இதை செய்,எனக்கு அதை செய் என்று எந்த கடவுளும் சொல்லவில்லை.நாம் அதில் செலவலிப்பதற்கு இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவினால் அவர்களின் வாழ்த்து நம்மை வாழ வைக்கும்.
எழுத்தின் மூலம்,பட்டின் மூலம்,கதையின் மூலம்.மற்றும் நகைச்சுவையின் முலம்,எடுத்துகூறினாலும்,இந்த மூடநம்பிக்கை என்னும் விஷ மருந்து தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.என்செய்வது?காலம் செய்த கோலம்...........

Saturday, September 20, 2008

திருமணம் பற்றி சில விஷயங்கள்

திருமணம் என்றால் இருமணம் ஒன்று சேர்ந்து செய்வது ஆகும்.திருமணம் என்றவுடன் அனைவருக்கும் நியாபகம் வருவது.தாங்கள் படும் கஷ்டங்கள்.திருமணத்தில் இரண்டு வகையாக உள்ளது.ஒன்று காதல் திருமணம் மற்றொன்று பெரியவர்களாக பார்த்து செய்வது.ஆனால் துன்பம் என்ரு வரும் போது இந்த இரண்டும் இளைச்சது கிடையாது.
திருமணத்தை பற்றி பெரிய பெரிய புலவர்கள் தங்கள் கருத்துகளை எழுதியுள்ளனர்.
பண்டைய கால திருமணங்கள் எல்லாம் ஒருவாரமாக சிறப்பாக இருக்கும் .ஆனால் இப்பொழுது கொஞ்சம் முன்னேறி ஒரு நாள் எடுத்துக்கொள்கின்றனர்..

"திருமணம் என்பது ஒரு சிறை.அதில் பெண் என்பவள் ஒரு கைதி ,ஆண் என்பவன் சிறை அதிகாரி " என்று பகவன் என்ற பெரியவர் கூறியுள்ளார்.
இவர் சொன்னகருத்தை முழுமையாக ஏற்று கொள்ளமுடியாவிட்டாலும் சில உண்மைகள் உள்ளன.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சியக்கப்படுகிறது,என்று கூறுவர்.அது உண்மையா என்று கேட்டால் பல பேரின் கருத்து,இல்லை என்றே இருக்கும்.திருமணம் என்பது அந்த ஒரு நாள் குடும்பத்தினரோடு இருந்து மகிழ்ச்சியாக இருப்பது.ஆனால் அதன் பிறகு வருவது கஷ்டங்களே!
பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டு செய்வதுதான் பிரச்சனை என்று நினைத்து.தன் வாழ்க்கையை தானே தேடும் பலருக்கு பல கஷ்டங்கள்.காதல் திருமணம் செய்து ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டு வாழ்ந்தார்களா என்றால் அவர்கள் தான் முதலில் விவாகரத்துக்கு முன்வருகின்றனர்.
விளையாட்டு நிகழ்ச்சியாக போய்விட்டது இந்த திருமணம்.தங்களது வாழ்க்கையை ஒரு விளையாட்டாக நினைக்கின்றனர்.
அதுபோல் இப்பொழுது நம் நாட்டிலும் திருமணம் ஒரு விளையாட்டு பொருளாக போய்விட்டது.
ஆண்கள் பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு திருமணம் ஒரு வேலியாக பயன்படுத்துவர்.ஆனால் இப்பொழுது நிறைய வழிகள் இருக்கிறது.எடுத்துக்காட்டாக "லிவிங் டூகெதர்"என்ற பெயரைக்கொண்டு வாழ்கின்றனர்.ஆதலால் திருமணம் இரண்டாம் பட்சமாக கருதப்படுகிறது.இப்படி வாழ்ந்து பிடித்தால் திருமணம் செய்து கொள்வர்.இல்லையென்றால் "பி பிரண்ட்ஸ்" என்று சொல்லிவிட்டு செல்வர்.
காதல் திருமணத்தை பொருத்தவரை காதலிக்கும் பொழுது நந்தவனமாக தெரிகிறது.ஆனால் திருமணம் போது ,அதன் பிறகு பலருக்கு போர்களமாகவும்,நரகமாகவும் இருக்கிறது.ஏன் செய்து கொண்டோம் என்ற நினைக்கிற அளவுக்கு போய்விடுகிறது.இதற்கு காரணம் புரிந்துகொள்ளமுடியாத தன்மை,அனைவருக்கும் அவரவர்களுக்கு ஏற்றவாறு துணை அமைந்ததா என்றால் முழுமையாக இல்லை .
திருமணம் எனப்து எதற்காக ஒரு மனிதனின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமென்றால்,ஒரு மனிதன் தன் இளமை இழந்து,இன்பங்களையும் பல நினைவ்வுகளையும் மறந்து,முதுமையில் தனிமை வாட்டும் பொழுது,ஆதரவாய் பார்க்க ஒரு துணைவி -அதற்கு திருமணம் என்பது அவசியம்.
பல ஜாதங்களை வைத்து பஜ்ஜி சொஜ்ஜி ,கெட்டிமேலம் கொட்டி செய்வது மட்டும் திருமணம் கிடையாது.தன்னை நம்பி வருபவளை நல்லபடியாக வைத்து கொள்வதும்,ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடுடன் வாழ்வதற்க்கும் திருமணம் உள்ளது.ஆனால் இதை எத்தனை பேர் ஒழுங்காக பின்பற்றுகிறார்கள்.
இருவரிடம் நடுவே நம்பிக்கை என்பது சற்று குறைந்தே காணப்படுகிறது.துரோகங்கள் தலைதூக்கியுள்ளன."ஈகோ" பிரச்சனை சொல்லவேவேண்டாம்.அந்த காலத்தில் ஒருத்தர் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்தனர்.ஆனால் இப்பொழுது கல்வி அதிகமாக கற்றதை வீணாக்கமல் வேலை செய்து கொள்வது,அந்த வேலையால் தினமும் ஒரு பிரச்சனை.நீ பெரியவனா,இல்லை நானா? என்ற பிரச்சனை ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறது(இரண்டு பேர் சம்பாதிக்கும் வீட்டில்)மண உணர்வுகளை வைத்து திருமணம் செய்வது போய் அந்தஸ்து வைத்து செய்வது அதிகமாகி விட்டது.அதனால் என்னவோ விவகாரத்துக்கள் அதிகமாகிவிட்டது????

திருமணத்தின் போது ஒரு பெண்ணின் கழுத்திலோ காதிலோ கையிலோ தாலியோ ,மெட்டியோ,மோதிரமோ ஏதாவது அணிவார்கள்.ஒருவர் திருமணமானவரா இல்லையா என்பது இதில் எதையாவது வைத்து தெரியும்.யாரும் தன்னை தவறான கண்ணோட்டத்தோடு பார்ப்பதை தவிர்கிறதற்கு வெளியில் தெரியும்வாறு அணிவார்கள் .
ஆனால் இப்பொழுது கண்டுபிடிப்பது கடினமாகிவிட்டது.
நம் சமுதாயத்தில் பல பெண்கள் திருமணம் என்பதை விரும்பாமல் தனியாக வாழ்பவர்கள் உண்டு.நான் முன்பு சொன்னமாதிரி ஒரு சிறையில் வாழ்வதற்கு பல பெண்கள் முன்வருவதில்லை.ஆனும் பெண்ணும் திருமணத்திற்கு பிறகும் நட்பை வளர்த்துகொண்டால் திருமணத்தை ஏன் சிறை என்று சொல்லபோகிறோம்!..
ஒருபெண்ணுக்கு ஆண் என்பவன் தன் வாழ்க்கையில் மிகவும் முக்கியம்,அதுபோல்தான் ஆணுக்கும்.அதற்குதான் திருமணம் என்பது .இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டுவாழ்ந்தால் திருமணம் எப்பொழுதும் நந்தவனமாகவே இருக்கும்.
இருமணம் கொண்டு இணைவது திருமணம் இல்லையென்றால் வெறுமணமாகும்.

Friday, September 19, 2008

சுயநலம்-பொதுநலம்

சுயநலம் பொதுநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட விஷயம்.ஒவ்வொரு மனிதனின் உண்ர்வுகளை கொண்டுதான் இந்த இரண்டு நலங்களும் அமைகிறது.
சுயநலம் இல்லாத மனிதர்கள் உள்ளார்களா?என்றால் உண்மையாக யாருமே கிடையாது.பொதுநலம் என்பது தானாக உண்டாக்கி கொள்வது .ஆனால் அதிலும் ஒரு சுயநலம் ஒளிந்துகொண்டுதான் இருக்கும்.
அதற்காக பொதுநலம் செய்பவர்களை நான் குற்றம் சொல்லவில்லை.
சுயநலம் என்ற தலைப்பு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும் ,ஆனால் இந்த தலப்பில் எழுதுவதற்கு காரணம் இதனால் வரும் துன்பங்கள் சலிப்புகள் என்னவென்று சொல்வதற்குதான்.
அதிக சுயநலம் கொண்டவர்களால் உறவுகளின் முன் நல்ல ஒரு பழக்கம் வைத்து கொள்ளமுடியாது.நாம் வாழும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சுயநலவாதியை சந்தித்து கொண்டுதான் இருப்போம்.அவர்கள் சுயநலமானவ்ர்கள் என்பது நமக்கு ஏதாவது ஒரு கஷ்டத்தில் உதவாமல் இருப்பவர்களை கண்டால் நம்க்கு தெரியும்.
முக்கியமாக பெண்களுக்கு சுயநலம் அதிகம் கொண்டவர்களாக இருப்பர்.
பெண்கள் சுயநலமாக இருப்பதற்கு காரணங்கள் கொஞ்சம் நியாயமானதாக இருக்கும்.ஆனால் ஆண்களுக்கு இருப்பது கொஞ்சம் ஆச்சரியப்படகூடியதே.
சுயநலத்தை தந்தை பெரியார் தன்னுடைய எழுத்தில் அழகாக சொல்லியுள்ளார்
"சுய நலத்துக்கு அறிவே தேவையில்லை உணவுக்கு அலைவதும்,உயிரைக்காப்பதும் எந்தச்சீவனுக்கும் இயற்கை.ஒவ்வொரு சீவனிடத்திலும் ஒவ்வொரு அருமையான, அற்புதமான, அதிசயமான குணங்கள் உண்டு என்றாலும் அவற்றையெல்லாம் அந்தந்தச் சீவனின் சுயநலத்துக்கேதான் பயன்படுத்துகின்றன "
சுயநலத்திற்கு அறிவு தேவையில்லை என்றே சொல்லலாம் .
சுயநலம் நல்லதா என்றால் ரொம்ப அறுவருப்பானது என்றே சொல்லுவேன்.
நம்முடைய வாழ்க்கை ,நம்முடை சந்தோஷம், நம்முடைய செல்வம் என்று குறிகோளாடு வாழ்வது ஒரு வாழ்க்கை கிடையாது என்றே நான் சொல்லுவேன்.
நாமே வாழ்ந்து கொண்டிரூந்தால் என்ன லாபம்.நம்மால் இயன்றவரை மற்றவர்களுக்கு செய்யும் உதவிகள் அவர்கள் வாயால் நம்மை வாழ்த்துவது இப்படி இருந்தால் வாழ்க்கை ஒரு அர்த்தமுடையதாக இருக்கும்.
நாம் என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொன்னால் பிரச்சனை வராது.சுயநலம் எப்பொழுது உண்டாகிறது ,இயலாமையால் தான்.
அடுத்தது பொதுநலம்.இது இருப்பது போல் சுயநலமாகவும் இருப்பார்கள்,.தன்னம்பிக்கை எந்த மனிதனிடம் அதிகமாக உள்ளதோ அவனிடம் பொதுநலம் அதிகமாக காணப்படும்.
சமூதாயத்திற்கு செய்யப்படும் உதவியே பொதுநலம் என்று குறிப்பீடுவோம்.
சுயநலம் என்பது நம்முடனே பிறந்தது.இரத்தத்தோடு கூடியது.யாரும் சொல்லித்தரத்தேவையில்லை.யாரை பார்த்தும் கற்றுகொள்ளத்தேவையில்லை.ஆனால் பொதுநலமோ அப்படியில்லை.பிறரை பார்த்து வருவது.சொல்லி தெரிவது.உணர்வொஇஒடு கூடியது.மற்றவர்களுக்கு உதவி செய்வது பொதுநலம்தான்.இரத்ததானம்,கண் தானம்,மற்று உறுப்புகளை தானம் செய்வது இவையெல்லாம் பொதுநலமே!...
சுயநலம் என்பது ஒரு பெண் எனலாம் ,பொதுநலம் என்பது ஆண்கள் எனலாம்.ஆகவே பெண் இல்லையேல் ஆண் இல்லை.அதுபோல் சுயநலம் இல்லையேல் பொதுநலம் இல்லை.இப்படி இவ்விருநலங்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒரு எடுத்துக்காட்டாக காதலின் சின்னமாக இருக்கும் தாஜ்மஹால் சாஜஹானால் கட்டப்பட்டது என்று அனைவ்ருக்கும் தெரியும்.ஆனால் இது அவருடைய காதலியாகிய மும்தாஜிற்காக கட்டியது ஆகும்,இதை நாம் சுயநலம் என்று சொல்வோமா,இல்லை பொதுநலம் என்று சொல்வோமா.ஆனால் உற்று பார்த்தால் அதை சுயநலம் என்றுதான் சொல்லமுடியும்.அவர் அதை வடிவமைக்கும் போது இது
நம் வாழ்விற்கு பிறகு இந்திய நாட்டின் அதிசயமாக அமையும் என்று நினைக்கவில்லை.தன் காதலுக்காக எழுப்பட்ட ஒரு காவியமாகும்.ஆனால் இப்பொழுது அது அனைவரின் கண்ணுக்கும் ஒரு விருந்தாக உள்ளது.
ஆகவே நம்முடைய சுயநலம் பொதுநலம் கூடிய ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்.
நான்+நான்=சுயநலம்
நான் +நாம்=பொதுநலம்.

Thursday, September 18, 2008

பண்பாடு ,கலாச்சாரம் ,நாகரீகம்

கலாச்சாரம் என்பது ஆச்சாரமாக கொண்டு ஆக்கப்படும் கலையே கலாச்சாரம்.சிறந்த கலைகளை கொண்டு செய்யபட்டது கலாச்சாரம்.நாகரீகம் என்பது கலாச்சாரத்தை மையமாக வைத்து வந்தது ஆகும்.பண்பாடு என்பது இவ்விரண்டையும் சேர்த்து ஒரு கலவையாக கொண்டு பண்படுவது.எத்தனையோ பேர் பண்பாடு பற்றியும்,கலாச்சாரம் மற்ற்றும் நாகரீகம் பற்றியும் எழுதியிருப்பார்கள்,நானும் என்னுடைய கருத்துக்களை எழுதுகிறேன் படியுங்கள்.
இப்பொழுது உள்ள மனிதனுக்கு இந்த மூன்றும் உள்ளதா? என்பது என்னுடைய கேள்வி.அதற்கு பதில் என்னிடம் கொஞ்சம் உள்ளது.பண்பாடு என்பது இல்லை என்றே நான் சொல்லுவேன்,.கலாச்சாரமும் நாகரீகமும் நம் தேசத்தில் எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது.
நாகரீகம் என்ற பெயரில் பெண்கள் செய்யும் அட்டூழியங்கள் அளவில்லதாவை.சில பெண்களை நான் குறிப்பிட்டு சொல்கிறேன்.இந்த வரிகள் ஆண்களுக்கும் பொருந்தும்.
நாம் அணியும் உடையிலும் சரி நாம் வாழும் வாழ்க்கையுலும் சரி ,மற்றவர்களிடம் அணுகும் பழகும் முறையிலும் சரி ,நாகரீகம் என்பது இருக்கவேண்டும் ஆனால் கலாச்சாரத்தோடு கூடிய பண்பாடும் இருக்கிறது என்று எத்தனை பேர் பார்க்கிறோம்.
நல்ல நாகரீகத்தோடு வாழ்கிறோம் என்ற பெயரில் பண்பாடு காணாமல் போய்விடுகின்றது.
ஒரு ஆண் பெண்பார்க்க போனால் அவள் நல்லவளா நமக்கு ஏற்றவளா? என்று பார்ப்பதை விட அவள் நாகரீகம் தெரிந்தவளா நம்முடைய பழக்கத்திற்கு ஏத்தவளா? என்று பார்க்கிறார்கள்.நான் இதை தவறு சொல்லவில்லை ஆனால் முக்கியமானது வேண்டும் அல்லவா?
அண்டை நாட்டு பழக்கங்கள் நம்மை எவ்வளவு தூரம் கவர்ந்துள்ளது என்பது நம்மிடமே நாம் பார்க்கலாம்."பேஷன் ஷோ" என்ற பெயரில் நம்முடைய கலாச்சாரம் மற்றும் பண்பாடும் தெரிகிறது.இவர்கள் அணியும் ஆடைகள் நன்றாக உள்ளதா என்று சரிபார்ப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கும் மற்றும் மதிப்பெண்கள் போட ஒரு கூட்டம் இருக்கும் .ஆனால் இதை வெளியில் இருந்து சொன்னால் மேன்ர்ஸ் இல்லையா என்று நம்மையே கேள்வி கேட்பர்.நான் யாரை பற்றி சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும்.என்னடா பெண்கள் சுதந்திரம்,சாதனை என்று பேசிவிட்டு இப்பொழுது பெண்களை பற்றி குறை சொல்கிறேன் என்ரு நினைக்கவேண்டாம் ,நியாயம் என்று உள்ளதல்லவா?இங்கேயும் சில பெண்கள் என்றே குறிப்பிடுகிறேன்.
வெளிநாட்டு பழக்கவழக்கங்களை நம் நாட்டில் கொண்டுவந்து ஆடும் ஆட்டங்கள் அப்பப்பா!..
அந்த ஆட்டத்தில் படீத்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.
நிறைய படித்தவர்கள் தான் "பப்" என்னும் ஒரு பெயரை வைத்து போடும் கும்மாளங்கள்...
இப்படி நாகரீகம் எல்லை மீறி போய்விட்டது..இப்படி எல்லை மீறுவதால் கலாச்சாரம் சீர்கெடுகிறது.பண்பாடு குறைகிறது.
தன் குழந்தைகள் "மாடர்ண்" ஆக இருக்கவேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் செய்யும் தவறுகள் நிறைய சொல்லலாம்.மற்ற பிள்ளைகளை விட தன் குழந்தை நல்ல அறிவாளியாக இரூக்கவேண்டும் என்ற எண்ணத்தை விட மாடர்னாக இருப்பதை விரும்புகிறார்கள்.
தன் குழந்தை ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் படும் சந்தோஷம் எல்லையே இல்லை.
தமிழ் எங்கள் மூச்சு என்று வாதடுபவர்களின் குழந்தைகள் ஆங்கிலம் நிறைவாக உள்ளவர்களாக தான் இருப்பார்கள்.இதற்காக நான் தப்பு சொல்லவில்லை.நாகரீகம் வளர்ந்துவிட்டது.
முன்பெல்லாம் திருமணம் என்றால் பட்டு சேலை இருக்கும் இப்பொழுது "சல்வார்கமீஸ்",காக்ரா",சோலி" என்று உடைகளை விதவிதமாக அணிகின்றனர்.மாப்பிள்ளை சொன்னாலோ இல்லை கூடியிருப்பவர்கள் சொன்னால் தான் மணபெண் யாரென்று தெரியும்.இவர்களை சொல்லி தப்பில்லை,கலாச்சாரம் அப்படி உயர்ந்துவிட்டது
பெரியவர்களை கண்டால் அவர்கள் வணக்கம் சொல்வதுபோய்,இப்பொழுது வயது வரம்பு பார்க்காமல்"ஹாய்","ஹலோ" என்று சொல்கின்றனர்.இவர்களை குற்றம் சொல்லமுடியாது,ஏனென்றால் வணக்கம் சொன்னால் யார் திரும்புகிறார்கள்.
பண்பாடு அந்த அளவு உயர்ந்துவிட்டது.
நாட்டில் கலாச்சாரம், பண்பாடும் நன்றாக அமைய பாடுபடுவோம் என்று சொன்னால் அதை பின்பற்றுவது கஷ்டம்தான்.இருந்தாலும் முயற்சி செய்வோம்!...................

Wednesday, September 17, 2008

சமூகமும் நட்பும்

சமூகம் என்றால் என்ன?நாம் தான் சமூகம்.நட்பு என்றால் என்ன ?நாம் தான் நட்பும்.சமூதயத்தில் நட்பு எந்த அளவுக்கு இடம்பெறுகிறது என்பதுதான் கேள்வி.அதற்கு பதில் நானே சொல்கிறேன்.உண்மையாக நட்பை இப்பொழுதுள்ள சூழ்நிலையில் அவ்வளவு பொறுப்பாக கருதுவதில்லை.நண்பர்கள் என்று சொல்கிறோம் .எத்தனை பேர் உண்மையான நட்போடு பழகுகிறார்கள்.நண்பன் என்றோ தோழி என்றோ நுழைய வேண்டியது.பிறகு அவர்களின் பழகத்தில் நட்பு தென்படாது ,காதல் என்ன்னும் சொல்லே தென்படும்.இதனால் உண்மையான நட்பை கூட சந்தேகபடவேண்டிய சூழ்நிலை.
இந்த சமுதாயத்தில் நட்பை எந்த அளவுக்கு கொச்சை படுத்துகிறார்கள்,என்பது கொஞ்சம் கவலையான விஷயம்.
அனைவரும் நண்பர்களாக இருப்போம் என்று சொல்லவேண்டியது ஆனால் அதை தொடர்வது கொஞ்சம் கஷ்டமாக தெறிகிறது.நான் எல்லா நட்பையும் சொல்லவில்லை.
எனக்கு தெரிந்த ஒரு பெண் நட்பு என்னும் பெயரை வைத்துக்கொண்டு செய்த அட்டூழியங்கள் ,சொல்கிறேன் கேளுங்கள்.
தான் செய்யும் தவறுகளுக்கு நட்பை ஒரு மையமாகவும் வழிகோலாகவும் அமைத்து மற்றவர் கண்ணுக்கு அதை நியாமாக நிருப்பித்தது.அவனுடன் ஊர் சுற்றுவது ,பிறகு பீச் செல்வது ,சினிமா செல்வது ,யாரவது கேட்டால் என்னுடைய நண்பன் என்று சொல்லவேண்டியது.நட்பிற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா?அது யாராக இருந்தாலும் ,ஆணோ பெண்ணோ.?தொலைபேசியில் நெடுநேரம் பேசுவது,பெற்றோர்கள் கேட்டால் என் நண்பன் என்று சொல்வது,இது தப்பித்து செல்ல கூடிய ஒரு எளிதான வழியாகும்."குரூப் டிஸ்கஷன்" என்ற பெயரில் கும்மாளம் அடிப்பது,இப்படி நிரைய சொல்லிகொண்டே பொகலாம்.
ஒரு பெண் ஒரு ஆண் நட்பு வைத்துக் கொண்டால் அதை தொடர்ந்து செல்வது மிகவும் கடினம்.எப்படியும் மனம் தடுமாறுகிறது.இப்படிதான் எனக்கு தெரிந்த இன்னொரு தொழியின் கதை.அவள் நெடுநாளாக ஒரு ஆணுடன் பழகியது,நட்பாக இல்லாமல் போனது,இது அவர்களின் நண்பர்களுக்கு தெரிய அதை மறுத்து தூய நட்பே எங்களுடையது,என்று வாதடினாள்,ஆனால் அந்த ஆணோ நாங்கள் நண்பர்கள் கிடையாது எங்களுக்குள் வேறு ஒன்று உள்ளது,என்று கூறினான்.
இதில் நான் சொல்லவருவது அவர்களுக்குள் என்னமோ இருக்கட்டும்,அதை பற்றி நான் கவலைபடவில்லை,ஆனால் நட்பு என்பது உண்மையான ,தூய்மையான ஒரு தெய்வீகமான ஒன்று,காதல் இல்லாமல் இருந்துவிடலாம் ,ஆனால் நட்பு இல்லாமல் இருக்கமுடியாது.அதை ஏன் கொச்சைப்படுத்துகிறீர்கள்?
இங்கு சொல்லபடும் ஒரு கவிதை நட்புக்கும் காதலுக்கும் பொருந்தும்.
"பார்த்தவுடன் பழகாதே
பழகியவுடன் இணையாதே
இணைந்தவுடன் பிரியாதே
பிரிந்தவுடன் வ்ருந்தாதே"

இந்த சமுதாயத்தில் நட்பு சில நேரத்தில் சந்தேகத்தை கொண்டுள்ளது.சிலபேர் செய்யும் தவறால் உண்மையான நட்புக்கு கூட மரியதை இல்லை.
மூன்று பேர் நண்பர்களாக இருந்தால் அதில் ஒருவன் தவறானவாக இருந்தால் அந்த ஒட்டு மொத்த நண்பர்களையும் தவறாக சொல்வது இந்த சமூதயத்தின் வேலை.
"உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்" என்று சொன்னால்,யாரும் நண்பனாக இருக்கமுடியாது ,நல்லவர்கள் மட்டும் நண்பர்களாகி விட்டால் ,தவறான வழியில் செல்பவர்களை யார் வழிநடத்துவது.
கெட்டவர்கள் இருந்தால் அந்த நட்பு கெட்ட நட்பும் .நல்லவர்கள் இருந்தால் அது நல்ல நட்பும் என்றும் சொல்வது வேடிக்கையான விஷயம்.
ஒரு நண்பர்கள் கூட்டத்தில் ஒரு கெட்டவன் இருந்தால் அவனை ஒழுங்குபடுத்துவது ஒரு உண்மையான தோழனின் கடமை.
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"அதுபோல் ஒரு நல்ல நட்பு ,அதை வைத்து நல்ல சமூகம் அமைவதும் இறைவனின் செயலே!
ஒரு சமூதாயத்தில் ஒரூவன் நல்ல நிலையில் இருக்கவேண்டும் என்றாலோ இல்லை அவன் ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டுமென்றாலோ ,பெற்றோர் அல்லது நண்பர்கள் நல்லவர்களாக அமைய வேண்டும்.
நாம் நன்றாக இருந்தால் சமூதாயம் நன்றாக இருக்கும்.அதுபோல் தான் நட்பும்,நாம் ஒவ்வருவரும் நன்றாக இருந்தால் நட்போடுகூடிய சமூகமும் நல்லதாக இருக்கும்.

கடைசியாக நான் ஒன்று சொல்லிகொள்கிறேன்,தயவு செய்து நட்பு என்னும் பெயரை வைத்துக் கொண்டு உங்கள் தவறான செயல்களுக்கு,அதை ஒரு விளையாட்டு பொருளாக பயன்படுத்தாதீர்கள்.அது போல் இந்த சமூதாயத்திற்கு,ஒரு ஆண் பெண் பழகுவதை தவறான கண்ணோட்டத்தை பார்க்காதீர்கள்.சமூதாயம் என்பது நாம் தான் .ஆதலால் நம்முடைய கண்கள் ஒழுங்கான பாதையில் செல்லவேண்டும்.எண்ணங்கள் தூய்மையாக இருக்கும்.
நாம்+நட்பு=சமூகம்